யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா: 50 ஆண்டுகால கல்விப் பயணத்தை கோலாகலமாக கொண்டாடியது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன் 50 ஆண்டுகால சிறப்பான கல்விப் பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பொன் விழா நேற்று (6) பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

ஈழத் தமிழர்களின் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையில் முக்கிய அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது தனி பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்று, இன்று நாட்டின் முன்னணி உயர்கல்வி நிலையமாக திகழ்கிறது.

பொன் விழா நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பங்கேற்றன. காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருட கல்வி வரலாற்றை ஒளிரச்செய்யும் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” என்ற நூலும், நினைவு முத்திரையும் இந்நிகழ்வில் சிறப்பாக வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *