மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி தடுப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 69 வழக்குகளுக்கான கோப்புகள் குறித்த விசாரணைகள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இக்கோப்புகள் அனைத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில், அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பானது 49ஆம் இலக்க வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு உரக்கூட்டுத்தாபன டெண்டர் வழங்கலில் முறைகேடு செய்ததன் மூலம் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் எட்டு மில்லியன் ரூபா துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இந்த குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் குமார ஜயகொடி உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
